×

ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம்

கடத்தூர்: கடத்தூர் அருகே தாளநத்தம் பகுதியில், ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடத்தூர் அடுத்த அய்யம்பட்டி, ரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, கந்தகவுண்டனூர், நொச்சிகுட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாளநத்தம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயை, மர்மநபர்கள் சிலர் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 3 நாட்களாக பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இது போன்று தண்ணீர் வீணாவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் இருந்து லட்சக்கணக்கான தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால், குடிநீரின்றி பல இடங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாயில் இருந்து வெளியேறி சேறும், சகதியுமாக தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து, குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, உடைந்த குழாயை சீரமைத்து, சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Hogenakkal ,millions , Water, Hogenakkal drinking water
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...